”நடிகை நவ்னீத் கெளர் போலி சாதி சான்றிதழ் அளித்து அமராவதி மக்களவை தனித்தொகுதியில் வெற்றி பெற்றார்” என்று தொடரப்பட்ட வழக்கில் நவ்னீத் கெளரின் சாதி சான்றிதழை ரத்து செய்ததோடு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம்.
தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘அரசாங்கம்’ படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை நவ்னீத் கெளர். அதனைத்தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர், கடந்த 2011 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநில சுயேட்சை எம்.எல்.ஏ ரவி ராணாவை திருமணம் செய்துகொண்டார். அரசியல்வாதியை திருமணம் செய்ததால், கடந்த 2014 ஆம் ஆண்டு அமராவதி மக்களவை தனித்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர், மீண்டும் அதே தொகுதியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாகவே நின்று வெற்றி பெற்றார்.
ஆனால், ”அமராவதி தனித்தொகுதியில் பட்டியலினத்தவர் என்று போலியாக சாதி சான்றிதழ் காட்டி நவ்னீத் கெளர் வெற்றி பெற்றுள்ளார். நவ்னீத் பஞ்சாபில் இருந்து வந்தவர்.மஹாராஷ்டிராவில் எஸ்.சி பிரிவிவின்கீழ் வராத லபானா சாதியை சேர்ந்தவர். தேர்தலுக்காக தனது சாதி சான்றிதழை போலியாக பள்ளியின் போலி ஆவணங்களைக் காட்டி பட்டியலினப் பெண் என்று சான்றிதழ் வாங்கிவிட்டார்” என்று சிவசேனா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த் ராவ் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இன்று நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கின் விசாரணையில் இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நவ்னீத் கெளரின் சாதி சான்றிதழை ரத்து செய்ததோடு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். மேலும், ஆறு வாரங்களுக்குள் அனைத்து சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கருத்து தெரிவித்துள்ள நவ்னீத் கவுர் ”இந்த நாட்டின் குடிமகளாக நீதிமன்றத்தின் உத்தரவை நான் மதிக்கிறேன். அதேசமயம், நான் உச்சநீதிமன்றத்தை அணுகுவேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2RAOaBm
0 Comments